மணிப்பூரில் குக்கி இன மக்கள் போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆட்சி அமைப்பு பணிக்கு தங்கள் இன எம்.எல்.ஏ.க்கள் உதவியதை கண்டித்து குக்கி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் குக்கி இன மக்கள் போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

மணிப்பூரில், கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மெய்தி இன மக்களுக்கும். குக்கி பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 260 பேர் பலியானார்கள். கலவரம் நீடித்ததால், பைரேன்சிங் தலைமையிலான பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலகியது. அதையடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, கெம்சந்த் சிங் தலைமையிலான புதிய பா.ஜனதா அரசு கடந்த 4-ந் தேதி பதவியேற்றது. ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது, குகி பழங்குடியின எம்.எல்.ஏ. என்.சனதே, ஜோ ஹமர் பழங்குடியின எம்.எல்.ஏ. எல்.எம்.காவுதே ஆகியோர் உடன் இருந்தனர். சட்டசபை கூட் டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஆட்சி அமைப்பு பணிக்கு தங்கள் இன எம்.எல்.ஏ.க்கள் உதவியதை கண்டித்து குக்கி, ஜோ ஹமர் பழங்குடியினத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் சுரசந்த்பூர் மாவட்டத்தில் நேற்று முழுஅடைப்பு நடத்தப்பட்டது. இதனால் சுரசந்த்பூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முழுஅடைப்பு ஆதரவாளர்கள், கைகளில் கட்டைகளை ஏந்திக்கொண்டு மாவட்ட தலைநகரில் வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

சந்தைகள் மூடப்பட்டு இருந்தன. வாகனங்கள் குறைந்த அளவிலேயே இயங்கின. கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் குறைவான நபர்களே வந்திருந்தனர். சுரசந்த்பூரின் துய்போங் பகுதியில் முழுஅடைப்பு முழுமையாக நடந்தது. மாவட்டத்தில் பதற்றம் நிலவியது. முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டன. குக்கி பெண்கள் அமைப்பு, தனியாக பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

முன்னதாக, துய்போங் வனத்துறை கேட் அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு வன்முறை கும்பலுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. கும்பல் கற்களை வீசியது. அதனால், பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் கும்பலை கலைத்தனர். நேற்று அதிகாலைவரை மோதல் நீடித்தது. 2 பேர் காயம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com