

புதுடெல்லி,
மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தை பல்வேறு மகளிர் அமைப்புகள் கண்டித்து உள்ளன.
அந்தவகையில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மலிவாலும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'மணிப்பூரில் வன்முறையைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறு பிரதமர் மோடி மற்றும் மணிப்பூர் முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதுகிறேன். அந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோவில் உள்ள ஆண்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிர் தப்பியவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பிற சிறுமிகள் மற்றும் பெண்களை சந்திக்க முதல்-மந்திரி பைரேன் சிங் என்னை அனுமதிக்க வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.
மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான உண்மை கண்டறியும் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ள சுவாதி மலிவால், இதன் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.