

புதுடெல்லி,
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுடன் இணைந்து சதிதிட்டம் தீட்டுவதாக குற்றம் சாட்டினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தொடர்புப்படுத்தி பேசியிருந்தார்.
இவ்விவகாரத்திற்கு காங்கிரஸ் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பாராளுமன்றத்திலும் காங்கிரஸ் இப்பிரச்சனையை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் முடங்கின. நேற்றும் மாநிலங்களவையில் இந்த பிரச்னை எழுப்பப்பட்டது. இதனால் நாளை வரை அவை ஒத்தி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மாநிலங்களவை கூடியதும் காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.