‘இளைஞர்கள் பலர் விஜய்க்கு எதிராகவும் வாக்களித்திருக்கிறார்கள்’ - திருமாவளவன்

தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும், தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும் என்றும் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘இளைஞர்கள் பலர் விஜய்க்கு எதிராகவும் வாக்களித்திருக்கிறார்கள்’ - திருமாவளவன்
Published on

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“விஜய் பெயரில் ஏராளமாக சூதாட்டம் நடக்கிறது. இந்த சூதாட்ட கும்பன் பரப்புகிற வதந்திதான் கருத்து கணிப்பு முடிவுகள். தேர்தலுக்கு முன்பு தி.மு.க.வை முன்வைத்து சூதாட்டத்தை நடத்தினார்கள். அகில உலக அளவில் இது நடைபெறுகிறது. இப்போது தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்பு , விஜய்யை முன்வைத்து இந்த சூதாட்டக் காய்களை நகர்த்துகிறார்கள். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர்கள் ஏமாந்து போவார்கள்.

நான் நேரடியாக 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்திருக்கிறேன். நாங்கள் போட்டியிட்ட 8 தொகுதிகள் மட்டுமின்றி, தோழமை கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் நான் பிரசாரம் செய்திருக்கிறேன். நேரடியாக களத்தில் கண்ட அனுபவத்தில் இருந்து நான் சொல்லுகிறேன், தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும்.

மக்களை நாம் எப்போதும் கொச்சைப்படுத்தக்கூடாது. நமக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் அவர்கள் நம்முடைய மக்கள், நமது வாக்காளர்கள். அவர்களை உரிய முறையில் மதிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு புதிய கட்சி தோன்றும்போது, அல்லது நடிகர்கள் அரசியலுக்கு வருகிறபோது அவர்களுக்கு பின்னால் பெரும் திறளாக மக்கள் கூடுவது வழக்கமான ஒன்றுதான். விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது இவ்வளவு சமூக ஊடகங்கள் கிடையாது. அதற்கு முன்பு பலர் இது போல கட்சி தொடங்கிய காலத்தில், வைகோ அல்லது அதற்கு முன்பு ராமதாஸ் உள்ளிட்டோர் மாற்று அரசியல் செய்யப் போகிறோம் என்று சொன்ன காலத்தில் சமூக ஊடகங்கள் கிடையாது.

இப்போது சமூக ஊடகங்கள் மூலம் தி.மு.க.வுக்கு மாற்று சக்தி என்று கூறுபவர்களை உயர்த்திப் பிடிக்கிறார்கள், அவ்வளவுதான். அவர்களின் எண்ணிக்கையும், சதவீதமும் வேண்டுமானால் கூடி இருக்கலாம். ஆனால் அவர்கள் தனித்து வெற்றி பெறுவதற்கோ, ஆட்சியை கைப்பற்றுவதற்கோ வாய்ப்பில்லை என்று நான் நம்புகிறேன்.

இளைஞர்கள் பலர் விஜய்க்கு எதிராகவும் வாக்களித்திருக்கிறார்கள், அதை யாரும் பெரிதாக பேசுவதில்லை. எவ்வளவோ இளைஞர்கள் இளம் தலைமுறையினர் குறிப்பாக, இந்த 20-ம் நூற்றாண்டு தலைமுறையினர் 100 சதவீதம் அப்படியே ஹீரோவுக்கு பின்னால் போய்விட்டார்கள் என்று சொல்ல முடியாது.

அவருக்கு எதிராக பேசக்கூடியவர்களும் ஏராளமானவர்கள் சமூக ஊடங்களில் இருக்கிறார்கள். அந்த அரசியல் வேண்டாம் என்று இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்தக்கூடிய இளைய தலைமுறையினரே ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அரசியல்படுத்தப்பட்ட இளைய தலைமுறையினர் பலர் இருக்கிறார்கள்.

அவர்களை எல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ஒட்டுமொத்தமாக 100 சதவீதம் இளம் தலைமுறையினரும், புதிய வாக்காளர்களும் ஒரு ஹீரோவுக்கு பின்னால் போய்விட்டார்கள் என்பதை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com