

ராய்ப்பூர்,
இந்தியாவில் நக்சல் பயங்கரவாதத்தை அடியோடு அழிக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் நக்சல்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நக்சல் அமைப்பை சேர்ந்த பலர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மார்ச் 31-ந்தேதிக்குள் இந்தியாவில் நக்சல் பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது;-
"சத்தீஷ்கார் அரசாங்கத்தின் மாவோயிஸ்ட் மறுவாழ்வுக் கொள்கை மிகவும் கவர்ச்சிகரமானது. நக்சல் அமைப்பை சேர்ந்தவர்கள் பலர் ஆயுதங்களை கைவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்து வருகின்றனர். நக்சல் அமைப்பின் பாதையில் இருப்பவர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மீதமுள்ள நக்சல்களில் இளம் பழங்குடிப் பெண்கள் பலரும் உள்ளனர். அவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கை அவர்களுக்கு முன்னால் இருக்கிறது. எனவே அவர்கள் மறுவாழ்வு பெற வேண்டும். சரணடையும் நக்சல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்கிறேன்.
ஆனால் தொடர்ந்து துப்பாக்கி ஏந்துபவர்கள், குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்துபவர்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தீ வைப்பவர்கள் இனி ஒருபோதும் தப்பிக்க முடியாது. ஆயுத வன்முறைக்கு உறுதியான பதிலடி கொடுக்கப்படும்.
மாவோயிசம் எந்த சமூகத்திற்கும் ஒருபோதும் பயனளிக்கவில்லை. மாறாக கொலம்பியா, பெரு மற்றும் கம்போடியா உள்பட மாவோயிசம் பரவிய நாடுகளில் எல்லாம் அழிவை மட்டுமே ஏற்படுத்தியது.
நாங்கள் யாருடனும் சண்டையிட விரும்பவில்லை. எங்கள் பழங்குடி சகோதர சகோதரிகளைப் பாதுகாப்பதே எங்கள் போராட்டம். வெடிகுண்டுகள் வெடிக்கும்போது அப்பாவி பழங்குடியினரும், குழந்தைகளும் கொல்லப்படலாம் அல்லது நிரந்தரமாக ஊனமுற்றவர்கள் ஆகலாம். இந்த கொடூர சிந்தனை எங்கிருந்து வருகிறது? நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட வேண்டும்.
பஸ்தர் மாவட்டம் இப்போது வேகமான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன, சாலைகள் போடப்படுகின்றன, மொபைல் கோபுரங்கள் நிறுவப்படுகின்றன, தபால் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. மேலும் கிராமங்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி விரிவுபடுத்தப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பஸ்தார் மாவட்டம் நாட்டின் மிகவும் வளர்ந்த பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக மாறும் என்பது உறுதி.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.