மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் கைதுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்: மராட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இது தொடர்பாக மராட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் கைதுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்: மராட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் கோரேகான்-பீமா கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் மராத்தா மற்றும் தலித் பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவரின் டெல்லி வீட்டில் சோதனையிட்ட போது, பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டிய கடிதம் கிடைத்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் ஐதராபாத், டெல்லி, அரியானா, சத்தீஷ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் மராட்டிய போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் என கருதப்படும் வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா, மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா, புரட்சிகர இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்களான ரோமிலா தாபர், பிரபாத் பட்நாயக் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட 5 பேரையும் வீட்டுக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

இந்த 5 பேரும் கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய், வக்கீல் பிரசாந்த் பூஷண், சமூக ஆர்வலர்கள் அருணா ராய், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் டெல்லியில் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், இந்த சட்டவிரோத கைது நடவடிக்கையானது, முறையான நடைமுறைகளை மீறிய செயல் எனவும், சட்ட அமைப்பை அவமதிக்கும் செயல் என்றும் கூறப்பட்டு இருந்தது. இது ஒரு தீய மற்றும் தவறான நோக்கமுடைய தாக்குதல் என வர்ணித்துள்ள அவர்கள், இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்ட மராட்டிய மாநில போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் ஜிக்னேஷ் மேவானி கூறும்போது, தலித் அமைப்புகளை இழிவுபடுத்துவது மற்றும் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது. பிரதமரை கொல்ல சதி நடப்பதாக கூறுவது அனுதாபத்தை பெறுவதற்கு மட்டுமே. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக செப்டம்பர் 5-ந் தேதி பல்வேறு இடங்களில் தலித் பிரிவினர் கண்டன கூட்டங்கள் நடத்துவர் என்று தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நடைபெறும் சம்பவங்கள், நெருக்கடி காலத்தைவிட ஆபத்தானது என பிரசாந்த் பூஷண் கூறினார்.

இதற்கிடையே வீட்டுக்காவலில் வைப்பதற்காக நேற்று காலையில் ஐதராபாத் கொண்டுவரப்பட்ட வரவர ராவ், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது ஒரு தவறான வழக்கு. பாசிச கொள்கைகளுக்கு எதிராக போராடுவது சதித்திட்டம் என்றால், அதைவிட மிகப்பெரிய சதித்திட்டம் வேறு இருக்க முடியாது. கோரேகான்-பீமா வழக்கை மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகத்தான் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com