

புதுடெல்லி,
உலக சுகாதார அமைப்பின் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்திய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் பகுதி இந்தியாவுடன் சேர்க்கப்படாமல் தனியாக வேற நிறத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சாந்தனு சென், பிரதமர் மோடிக்கு ஜனவரி 30ந்தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ராஜ்ய சபாவில் இதுகுறித்து, சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கேள்வி எழுப்பினார்.வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதா என்று அவர் கேட்டார். அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் பதில் அளித்தார்.
அதில், உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் இந்திய வரைபடத்தை தவறாக குறிப்பிட்டுள்ளது தொடர்பாக கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் ஜெனிவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகத்தில் விளக்கம் கொடுத்துள்ளனர். அவர்கள் தங்கள் இணையதளத்தில் மறுப்பு ஒன்றை போட்டுள்ளனர் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
அவர்களிடம் இந்தியாவின் வரைபடம் சரியாக காட்டப்பட வேண்டும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் வலியுறுத்தப்பட்டது என்று கூறினார்.