மராட்டியம்; தேசியவாத காங்கிரசை சேர்ந்த, மேலவை தலைவரின் மருமகன் சட்டசபை சபாநாயகர்: பட்னாவிஸ் பேச்சு

மராட்டிய சட்டசபையில் பேசிய துணை முதல்-மந்திரி பட்னாவிஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த, மேலவை கவுன்சில் தலைவரான ராம்ராஜே நாயக் நிம்பல்கரின் மருமகன் ராகுல் நர்வேகர் என கூறியுள்ளார்.
மராட்டியம்; தேசியவாத காங்கிரசை சேர்ந்த, மேலவை தலைவரின் மருமகன் சட்டசபை சபாநாயகர்: பட்னாவிஸ் பேச்சு
Published on

புனே,

மராட்டியத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிவசேனாவின் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. கைகோர்த்தது.

இந்த சூழலில், மராட்டிய சபாநாயகர் கடந்த வியாழ கிழமை (30ந்தேதி) அவையை கூட்டி, வாக்கெடுப்பு நடத்தி, மாலை 5 மணிக்குள் சிவசேனா அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.

இந்நிலையில், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறி கடந்த 29ந்தேதி இரவு உத்தவ் தாக்கரே பதவி விலகினார். அவர் பதவி விலகிய சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவசியமில்லை என கவர்னர் கூறினார்.

இதன்பின்னர், அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. அதிக உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பட்னாவிஸ் துணை முதல்-மந்திரி என்றும் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவியேற்பார் என்றும் தகவல் வெளியானது. இதன்படி, ஷிண்டே முதல்-மந்திரியானார்.

மராட்டியத்தில் புதிய அரசு வருகிற திங்கட் கிழமையன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

சிவசேனாவில் இருந்து கட்சி விரோத நடவடிக்கைக்காக ஷிண்டேவை, அதன் தலைவர் உத்தவ் தாக்கரே நீக்கியுள்ளார். பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ. ராகுல் நர்வேகரை சபாநாயகர் ஆக்கும் பணிகளில் அக்கட்சி மும்முரமுடன் ஈடுபட்டது.

இந்நிலையில், மராட்டிய சட்டசபையில் இன்று பேசிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மராட்டிய சட்டசபையின் சபாநாயகர் ராகுல் நர்வேகர் மிக இளம் வயதுடையவர். மராட்டியத்தில் மட்டுமின்றி நாடு முழுவதற்கும் அவர் இளவயது சபாநாயகர் என கூறியுள்ளார்.

தொடர்ந்து பட்னாவிஸ் கூறும்போது, ராகுல் நர்வேகர், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மராட்டிய மேலவை கவுன்சில் தலைவரான ராம்ராஜே நாயக் நிம்பல்கரின் மருமகன் ஆவார் என கூறியுள்ளார்.

அதனால், மராட்டியத்தில் சட்டசபை சபாநாயகராக இருப்பவர் மருமகன். மேலவை கவுன்சில் தலைவராக இருக்கும் ராம்ராஜே நாயக் நிம்பல்கர் மாமனார் என்று சட்டசபையில் பேசிய பட்னாவிஸ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com