

மும்பை
மராட்டியத்தின் மும்பை நகரில் அக்ரிபாத பகுதியில் பேபி கார்டன் என்ற இடத்தில் சகோதரர்கள் இருவர் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம், அவர்கள் இருவரும் கடையில் நின்று கொண்டு உரையாடியபடி இருந்தனர். சத்தம் போட்டு சிரித்து, பேசியபடியும் இருந்தனர்.
அப்போது பிரோஸ் மன்சூரி என்பவர் அவர்களுடைய கடைக்கு வந்துள்ளார். அவர் பொருட்களை வாங்கியுள்ளார். அப்போதும், சகோதரர்கள் இருவரும் சிரித்து பேசியபடி இருந்துள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் தன்னை பார்த்துதான் சிரிக்கின்றனர் என மன்சூரி தவறாக நினைத்திருக்கிறார்.
இதனால், ஆத்திரம் அடைந்த அந்த நபர் பையில் இருந்த பெரிய கத்தி ஒன்றை எடுத்து, சகோதரர்களில் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளார். 5 முதல் 6 முறை கத்தியால் குத்தியதில், கை மற்றும் பல பகுதிகளில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.
இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரு சில மணிநேரத்தில் குற்றவாளி மன்சூரியை கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே குற்ற பின்னணி உண்டா? அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளாரா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.