மராட்டியம்: பாரில் நடன அழகிகள் மீது ரூபாய் நோட்டுகள் வீச்சு; வைரலான வீடியோ

நடன பார்கள் செயல்பட சுப்ரீம் கோர்ட்டு, கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ள போதிலும், பல்வேறு இடங்களில் சட்ட மீறல்கள் நடைபெறுகின்றன.
நவி மும்பை,
மராட்டியத்தின் நெருல் நகரில் நடன அழகிகளுடன் கூடிய பார்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், விதிகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக தனியார் பார் ஒன்று செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இதுபற்றி ரகசிய கேமராவில் காட்சிகள் பதிவாகி இருந்தன.
அதில், நடன அழகிகள் மீது வாடிக்கையாளர்கள் ரூபாய் நோட்டுகளை வீசுகின்றனர். மராட்டியத்தின் உரிமம் மற்றும் பொழுதுபோக்கு சட்டத்தின் கீழ் இது தடை செய்யப்பட்டு உள்ளது.
அதே தருணத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் கூடுதலாக பார் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுகின்றன என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
இதுபற்றி நவி மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற நடன பார்கள் செயல்பட சுப்ரீம் கோர்ட்டு, கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ள போதிலும், பல்வேறு இடங்களில் சட்ட மீறல்கள் நடைபெறுகின்றன. சமீபத்தில் மராட்டிய மந்திரி யோகேஷ் கதம் உத்தரவின் பேரில் வஷி பகுதியில் செயல்பட்ட சட்டவிரோத நடன பார் ஒன்றில் சோதனை நடந்தது.
உரிமம் இன்றி செயல்பட்ட அந்த நடன பாரில் ஆபாச நடனங்களும் அரங்கேறியுள்ளன. 40 பெண்கள் மீட்கப்பட்டதுடன், 46 பேருக்கு எதிராக வழக்கு பதிவானது. பார் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எதிராக வழக்கும் பதிவாகி உள்ளது.






