

மும்பை,
மராட்டியத்தில் ஆரிரியர் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
மராட்டிய மாநிலம் நான்டெட் மாவட்டத்தின் போடா புத்ருக் ஜில்லா பரிஷத் பள்ளியில் சுனில் மோர் (வயது 42) ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலையில், தனது மகள் சாரா (வயது 12) மற்றும் சுமித் (வயது 8) ஆகியோருடன் காரில் புறப்பட்டார்.
அப்போது அம்டுரா-புனேகான் சாலையில் சென்றபோது, திடீரென காரை பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி, கோதாவரி ஆற்றில் செலுத்தினார். இதனால் காரில் இருந்த அவரது குழந்தைகள் பயத்தில் அய்யோ அம்மா என கத்திக் கூச்சலிட்டனர். ஆனால் கார் ஆழமான நீரில் மூழ்கியதில், மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தற்கொலை செய்வதற்கு முன்னதாக ஆசிரியர் சுனில் மோர் தனது வாட்ஸ்அப் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டேட்டஸ் போலீசாரிடம் சிக்கியது. அதில், "கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் என்னை தொடர்ந்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி துன்புறுத்துகிறார்கள். அவர்களின் தொல்லைகளைத் தாங்க முடியாமலேயே நான் இந்த விபரீத முடிவை எடுக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
தகவலறிந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் சுமார் 3 மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு காரையும், மூவரின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்குத் தூண்டிய அதிகாரிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.