

ஜம்மு,
ஜம்மு-காஷ்மீருக்கு சட்டப்பிரிவு 370ன் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ந்தேதி ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து, லடாக் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் வன்முறை சம்பவங்கள் பரவிவிடாமல் தடுப்பதற்காக காஷ்மீரில் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். பின்பு பல நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஜம்மு நகரில் இன்று காலை ஒற்றுமைக்கான ஓட்டம் என்ற பெயரில் மாரத்தான் ஓட்ட பந்தயம் நடந்தது. இதனை டி.ஜி.பி. தில்பாக் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த ஓட்ட பந்தயத்தில் இளைஞர்கள், பெண்கள் என பலர் ஆர்வமுடன் திரளாக கலந்து கொண்டனர்.