

பனாஜி,
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 28,380 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 6362 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இல்லா மாநிலமாக கோவா உள்ளது.
இந்நிலையில் முகக்கவசம் அணிவதும், சமூக விலகலை கடைப்பிடிப்பதற்கும் மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், முகக்கவசம் அணிவதும், சமூக விலகலை கடைப்பிடிப்பதற்கும் மக்கள் பழகிக் கொள்ள வேண்டும். இது 2 ஆண்டுகளுக்குத் தொடரக்கூடும். கோவா வருவதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோர் வருவதை எண்ணி கவலை கொள்கிறோம். அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கான எல்லைகளை பூட்டுவதைத் தொடர விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.