கடந்த 9 ஆண்டுகளில் 1.25 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன - மத்திய மந்திரி தகவல்

கடந்த 9 ஆண்டுகளில் 1.25 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் கூறினார்.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

புதுடெல்லி,

மோடி அரசு பதவி ஏற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, கடந்த 9 ஆண்டுகளில் மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் டெல்லியில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளில், வேலைவாய்ப்பு பெருமளவு அதிகரித்துள்ளது. 1 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் தரவுகளை பார்த்தால், 2014-2015 நிதிஆண்டில், வைப்புநிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட சந்தாதாரர்கள் எண்ணிக்கை 15 கோடியே 84 லட்சமாக இருந்தது. 2021-2022 நிதி ஆண்டில், இந்த எண்ணிக்கை 27 கோடியே 73 லட்சமாக உயர்ந்தது.

ஓய்வூதியதாரர்கள்

வைப்புநிதி அமைப்பின் சம்பள பட்டியல்படி, கடந்த 2022-2023 நிதி ஆண்டில் மட்டும் 1 கோடியே 38 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். முந்தைய 2021-2022 நிதிஆண்டில் 1 கோடியே 22 லட்சம் சந்தாதாரர்களும், 2020-2021 நிதிஆண்டில் 77 லட்சத்து 8 ஆயிரம் பேரும் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் புதிதாக வேலை பெற்றவர்கள் ஆவர்.

கடந்த 2014-2015 நிதி ஆண்டில் ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை 51 லட்சமாக இருந்தது. 2021-2022 நிதி ஆண்டில் 72 லட்சமாக உயர்ந்தது. 9 ஆண்டுகளில் 21 லட்சம் பேர் மட்டும் ஓய்வு பெற்ற நிலையில், புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது.

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி படுக்கைகள் அதிகரிப்பு

சேவை, நல்ல நிர்வாகம், நல்வாழ்வு ஆகிய 3 அம்சங்களில் மோடி அரசு கவனம் செலுத்தி வருகிறது. அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் நலன்களில் மட்டுமின்றி, அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன்களிலும் அக்கறை செலுத்தி வருகிறோம்.

மொத்த பணியாளர்களில் 10 சதவீதம்பேர் மட்டுமே அமைப்பு சார்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். மீதி 90 சதவீதம்பேர், அமைப்புசாரா தொழிலாளர்கள்.

அமைப்புசாரா தொழிலாளர்களின் தகவல்களை பதிவு செய்ய 'இ-ஷரம்' இணையதளம் தொடங்கப்பட்டது. 400 வகையான பணிகளை செய்பவர்கள் அதில் பதிவு செய்யப்படுகிறார்கள்.

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 231 ஆக உள்ளது. விரைவில், மேலும் 10 ஆயிரத்து 120 படுக்கைகள் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com