இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதம் சரிவு - சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பாராட்டு

இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதம் சரிந்திருப்பது குறித்து மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஒடிசாவின் புரி நகரில் சுகாதாரத்துறை சார்ந்த தேசிய மாநாடு ஒன்றை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பட்டியலிட்டு பாராட்டினார்.
குறிப்பாக பிரசவ கால தாய்-சேய் மரணம் கணிசமாக குறைந்திருப்பதாக பெருமிதத்துடன் பேசினார். இதற்காக 2017-ம் ஆண்டு சுகாதார கொள்கையை பாராட்டிய அவர், இதன் மூலம் சுகாதார அமைப்பிலேயே முன்னுதாரண மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-
"இந்தியாவில் பிரசவ கால தாய் மரண விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி உலகளாவிய சரிவை விட இரு மடங்கு அதிகமாகும். இது சுகாதார அமைப்பை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.
இதைப்போல பிரசவ கால குழந்தை இறப்பு விகிதம் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை மரண விகிதமும் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்திருக்கிறது.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகள் 30 நாட்களுக்குள் புற்றுநோய் சிகிச்சையை பெறுவதில் 90 சதவீதம் அதிகரிப்பைக் கண்டதாகவும், சிகிச்சையில் தாமதங்களைக் குறைப்பதாகவும், புற்றுநோய் நோயாளிகளின் நிதிச் சுமையைக் குறைப்பதாகவும் சமீபத்திய லான்செட் ஆய்வு கண்டறிந்துள்ளது.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் வாய், மார்பகம் மற்றும் கருப்பை வாய் ஆகிய மூன்று வகையான புற்றுநோய்களுக்கான இலவச பரிசோதனையை வழங்கும் தேசிய சுகாதார திட்டத்தின் தொடர்ச்சியான பரிசோதனை இயக்கத்திற்கும் பாராட்டுகள்.
தொற்றாத நோய்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை களைய வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டியது அவசியம். இந்தியாவின் சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பராமரிப்பு புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும்."
இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.






