மொரீசியஸ் பிரதமர் ராம்கூலம் 9-ந்தேதி இந்தியா வருகை

மொரீசியஸ் பிரதமரின் இந்திய பயணத்தில் மும்பை, வாரணாசி, அயோத்தியா மற்றும் திருப்பதி போன்ற நகரங்களுக்கு செல்வார்.
புதுடெல்லி,
மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் வருகிற 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 8 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த பயணத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பேசுகிறார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்து மூலோபாய நட்புறவை இன்னும் கூடுதலாக மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வார்.
இந்த பயணத்தில் மும்பை, வாரணாசி, அயோத்தியா மற்றும் திருப்பதி போன்ற நகரங்களுக்கு அவர் செல்ல உள்ளார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. மும்பையில் அவர் வர்த்தக நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்கிறார்.
இந்தியாவும், மொரீசியசும் பகிரப்பட்ட வரலாற்று, கலாசார மற்றும் மக்கள்-மக்கள் பிணைப்புகளில் வேரூன்றிய ஒரு நெருங்கிய மற்றும் சிறந்த நட்புறவை கொண்டுள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
மொரீசியஸ் பிரதமர் ராம்கூலம் இதற்கு முன், கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார். புதிதாக பதவியேற்ற பின்னர், அவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
பிரதமர் மோடி கடந்த மார்ச்சில் மொரீசியசுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், ராம்கூலத்தின் இந்திய பயணம் அமைந்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையேயான வலிமையான மற்றும் உறுதியான பிணைப்புகளை நவீனப்படுத்தும் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.






