

புதுடெல்லி,
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சமீபத்திய அறிக்கையில் ரெயில்வே மற்றும் பொத்துறை வங்கிகளுக்கு எதிராகவே அதிகமான ஊழல் புகார்கள் பெறப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் பெறப்பட்ட ஊழல் புகார்களின் எண்ணிக்கையானது கடந்த 2016-ம் ஆண்டுடன் ஒப்பீடுகையில் 52 சதவிதம் வரையில் குறைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் 2017-ம் ஆண்டைய வருடாந்திர அறிக்கையானது பாராளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் கடந்த வருடம் மட்டும் 23,609 புகார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது என ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு இதுவே 49,847 புகாராக இருந்து உள்ளது.
"பெரும்பான்மையான புகார்களில் குற்றச்சாட்டுகள் தெளிவற்றவை அல்லது தெளிவுசெய்ய முடியாதவையாக இருந்தது. மாநில அரசுக்கள் மற்றும் பிற அமைப்புகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு எதிராக கணிசமான அளவு புகார்கள் ஆணையத்திற்கு வந்து உள்ளது, அவைகள் ஆணைக்குழுவின் அதிகாரவரம்பிற்கு கீழ் வராத இயல்பை கொண்டவை, என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2015-ம் ஆண்டில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் பெற்ற புகார்கள் 29,838 ஆகும். இதுவே 2014, 2013 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் முறையே 62,362, 31,432 மற்றும் 37,039 புகார்களாக இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து மிகவும் குறைவான அளவு புகார்கள் பெறப்பட்டு உள்ளது. 16,929 புகார்கள் பெற்றப்பட்டு உள்ளது.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு நேரடியாக கிடைக்கப்பெற்ற புகார்கள் தவிர, 57,000 புகார்கள் தலைமை கண்காணிப்பு அதிகாரிகளுக்கு வந்து உள்ளது. ரெயில்வே அதிகாரிகளுக்கு எதிராக இதுபோன்று 12,089 புகார்கள் வந்து உள்ளது, 9,575 புகார்கள் முடித்து வைக்கப்பட்டு உள்ளது. 2,514 புகார்கள் நிலுவையில் உள்ளது. ரெயில்வே பணியாளர்களுக்கு எதிரான 1,037 புகார்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. டெல்லி மாநகராட்சிகளுக்கு எதிராகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு வங்கிஅதிகாரிகளுக்கு எதிராக 8,018 புகார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2017-ல் டெல்லி அரசு பணியாளர்களுக்கு எதிராக அதிகமான ஊழல் புகார்கள் பெறப்பட்டு உள்ளது.
மத்திய நேரடி வரி வாரியத்தின் பணியாளர்களுக்கு எதிராக 2,730 புகார்கள் பெறப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிராக 682 புகார்களும், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 605 ஊழல் புகார்களும், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சக பணியாளர்களுக்கு எதிராக 436 புகார்களும், உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 228 புகார்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற பிற அரசு முகமைகளில் பணிபுரிபவர்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட புகார்களும் அதில் இடம்பெற்று உள்ளது.