

உடுப்பி,
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உடுப்பியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
உடுப்பி மணிப்பால் நிறுவனத்தில் 11 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 900 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த நிறுவனமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தாலும் மரணங்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
கர்நாடகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கர்நாடகத்தில் புதிதாக 2,000 டாக்டர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.