கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கொரோனா வைரசால் உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை பல்வேறு தொழில்களின் பிரதிநிதிகள், இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு, அசோசாம் போன்ற அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.

சீனாவை உலுக்கி எடுக்கும் கொரோனா வைரஸ், இந்திய தொழில்துறையில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் குறித்து அவர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார். அவர்களின் கவலைகளை கேட்டறிந்தார். மத்திய அரசின் பல்வேறு துறை செயலாளர்களும் இதில் பங்கேற்றனர்.

சவால்

பின்னர், நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கொரோனா வைரசால் இந்திய ஏற்றுமதி, இறக்குமதியுடன் இதர தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. மேக் இன் இந்தியா திட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், உரிய ஆவணங்கள் வந்து சேராததால், இந்திய துறைமுகங்களிலேயே முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில், இந்த பாதிப்புகளை சவாலாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம் நாடு, இறக்குமதியை சார்ந்திருப்பதை இது குறைத்துள்ளது. ஆகவே, மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

நடவடிக்கை அறிவிப்பு

19-ந் தேதி (இன்று) மத்திய அரசின் பல்வேறு அமைச்சக செயலாளர்கள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதன்பிறகு பிரதமர் அலுவலகத்துடனும் ஆலோசனை நடத்தப்படும்.

அதன் அடிப்படையில், கொரோனா வைரசால் உள்நாட்டு தொழில்களும், பொருளாதாரமும் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும்.

நல்லவேளையாக, கொரோனா வைரசால் விலைவாசி உயர்ந்ததாக தகவல் இல்லை. அதுபோல், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. சில மருந்து பொருட்களின் ஏற்றுமதிக்கு தடையை நீக்குமாறு மருந்து தொழில்துறை கேட்டுள்ளது. அப்படி செய்தால், சில மருந்துகள் வினியோகத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com