

புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் பல்ஸ் ஆக்சி மீட்டர், குளுக்கோமீட்டர், ரத்த அழுத்த மானிட்டர், நெபுலைசர், டிஜிட்டல் தெர்மாமீட்டர் ஆகிய 5 மருத்துவ சாதனங்கள் அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றின் விலை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் இந்த மருத்துவ சாதனங்கள் மீதான லாபம் வினியோகஸ்தர் மட்டத்தில் இருந்து 70 சதவீதம்தான் இருக்க வேண்டும் என்ற உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது 20-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை இவற்றின் மீது 3 முதல் 709 சதவீதம் வரை லாபம் பார்க்கப்பட்டு வந்ததாக தேசிய மருந்து பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
உற்பத்தியாளர்கள், சந்தையிடுவோர், இறக்குமதியாளர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட தரவுகள்தான் இந்த 5 சாதனங்கள் மீது வினியோகஸ்தர் மட்டத்தில் இருந்து அதிகபட்ச சில்லரை விற்பனை விலை வரையில் 709 சதவீதம் லாபம் பார்த்துவருவதை காட்டுவதாக தேசிய மருந்து பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் கூறுகிறது. கடந்த மாதம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான லாப வரம்பை 70 சதவீதமாக நிர்ணயித்தது நினைவுகூரத்தக்கது.
இப்போது 5 மருத்துவ சாதனங்கள் மீதான லாபத்துக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலைகள் கணிசமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.