

திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தவர் எம்பேல் அகஸ்டின் (21 வயது). வயநாடு காக்க வயலை சேர்ந்த இவர், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளின் புகைப்படங்களை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுத்து ஆபாச படங்களாக உருவ மாற்றம் செய்துள்ளார். பின்னர் அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். இதனை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக எம்பேல் அகஸ்டின் மீது 7 மாணவிகள் மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது, நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எம்பேல் அகஸ்டினை போலீசார் வேறொரு வழக்கில் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், 20-க்கும் மேற்பட்ட மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக உருவ மாற்றம் செய்து அவர் சமூக வலைதளங்களில் பரப்பியது தெரிய வந்தது. எம்பேல் அகஸ்டினை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக மருத்துவக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.