மக்களவையில் மருத்துவ கவுன்சில் மசோதா நிறைவேறியது

மக்களவையில், இந்திய மருத்துவ கவுன்சில் மசோதா நிறைவேறியது.
மக்களவையில் மருத்துவ கவுன்சில் மசோதா நிறைவேறியது
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் மருத்துவ கல்வியையும், மருத்துவ தொழிலையும் ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பாக இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பட்டு வந்தது.

ஊழல் புகார்கள் காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு அந்த கவுன்சில் கலைக்கப்பட்டது. அதற்கு மாற்றாக நிர்வாகிகள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, மருத்துவ கல்வியை நிர்வகித்து வருகிறது.

இந்த மாற்றத்துக்காகவும், நிர்வாகிகள் குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்கவும் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தற்போது, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதால், அவசர சட்டத்துக்கு மாற்றாக, இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா, கடந்த 27-ந் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்துக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் நேற்று பதில் அளித்தார். அப்போது, நிர்வாகிகள் குழுவின் நிர்வாகத்தால், மருத்துவ இடங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், நலிந்த பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்திருப்பதாகவும் அவர் கூறினார். மருத்துவ கல்வி சீர்திருத்தத்துக்காக, தேசிய மருத்துவ ஆணைய மசோதா, விரைவில் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து நடந்த குரல் வாக்கெடுப்பில் மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா நிறைவேறியது.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ரவ்நீத் சிங் பிட்டு, பகவந்த் மான் ஆகியோர், பஞ்சாப்பில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால், புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறினர்.

அதற்கு பதில் அளித்த மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர், புற்றுநோய்க்கும், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறப்படுவதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் கிடையாது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது என்று கூறினார்.

கடந்த 2016-ம் ஆண்டு, நாட்டின் மொத்த மரணங்களில் தொற்றா நோய்களால் ஏற்பட்ட மரணம் 61.8 சதவீதம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.

முதுமை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உடல் உழைப்பு இல்லாமை, அதிக ரத்த அழுத்தம், உயர் நீரிழிவு, அதிக கொழுப்பு, அதிக எடை ஆகியவையே தொற்றா நோய்களுக்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

மத்திய ஓமியோபதி கவுன்சிலுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் பதவிக்காலத்தை ஓராண்டில் இருந்து 2 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான மசோதாவுக்கு மாநிலங்களவையில் கட்சி எல்லைகளை கடந்து உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இம்மசோதா, மக்களவையில் ஏற்கனவே நிறைவேறிவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com