கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை

கத்தார் நாட்டில் இருந்து ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் கத்தார் நாட்டில் இருந்து இன்று அதிகாலை விமானம் மூலமாக 4,300 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள், 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 40 வெண்டிலேட்டர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன. இதற்கு முன்பாக கடந்த இரண்டு தினங்களில், கத்தார் நாட்டில் இருந்து கப்பல் மூலம் 40 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன், 2 திரவ ஆக்சிஜன் கன்டெய்னர்கள் மற்றும் 230 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com