

புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற கோரியும் அரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்காக, லாரிகளிலும், டிராக்டர்களிலும் படையெடுத்த விவசாயிகள், தங்களுடன் 6 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களை உடன் எடுத்து சென்றுள்ளனர். இதனால், வேண்டிய உணவை தயார்படுத்தி கொள்கின்றனர். நள்ளிரவில் கடும் குளிரையும் கண்டுகொள்ளாமல் அனுமதி கிடைத்த இடத்தில் படுத்து உறங்கி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் டெல்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனினும், சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் விவசாயிகள் திரண்டுள்ளனர்.
டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழைபவர்களால் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், டெல்லி மற்றும் அரியானா எல்லை பகுதியான சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக முகாம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி டாக்டர் ஒருவர் கூறும்பொழுது, நாங்கள் இங்குள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வது அவசியம். கொரோனா வைரசை பரப்ப கூடிய தாக்கம் நிறைந்த நபர் யாரேனும் இங்கிருக்க கூடிய சாத்தியம் இருப்பின், அந்த தொற்றானது மற்றவர்களுக்கும் பரவ கூடும். இது பேரிடரை உருவாக்கும் என கூறினார்.