

கோழிக்கோடு,
திருவனந்தபுரத்தில் நேற்று காலையில் சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து அரசு டாக்டர்கள், நர்சுகள், மருந்தாளுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மந்திரி கே.கே.சைலஜா கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேரள மாநிலம் முழுவதும் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, ஆலப்புழை, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு டாக்டர்கள், நர்சுகள் நேரடியாக சென்று மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள். சிகிச்சைக்கு தேவையான மருந்து, மாத்திரைகளும் அவர்கள் கொண்டு செல்வார்கள். முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு டெங்கு உள்பட பல்வேறு காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. அதை தடுக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முகாமில் இருப்பவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். டாக்டர்களுக்கு உதவியாக இருப்பதற்காக மாநிலம் முழுவதும் தற்காலிகமாக 1,600 நர்சுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள சுகாதார அதிகாரிகளும் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேற்கண்டவாறு அவர் கூறினார்.