

புதுடெல்லி,
தேசிய வனவிலங்கு வாரியத்தின் 92-வது நிலைக்குழு கூட்டம் மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் தலைமையில் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது.
'வாழ்விடங்களை இணைத்தல், செழிப்பான வனவிலங்குகள்' என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட்ட வனவிலங்கு வாரம் 2026 குறித்த அறிக்கை இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பக்சாவில் புலிகள் மறுஅறிமுகம், ராஜஸ்தானில் கானமயில்கள் விடுவிப்பு மற்றும் சிவிங்கிப்புலிகள் திட்டத்தின் 3-வது கட்ட விரிவாக்கம் ஆகியவை குறித்து மந்திரி எடுத்துரைத்தார்.
வனவிலங்கு வாரத்தையொட்டி சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மந்திரி பூபேந்தர் யாதவ் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
தமிழ்நாட்டை சேர்ந்த வி. குமரேசன், ஹுகாய் ஹெச் ஜிமோ மற்றும் மறைந்த பனோத் நவீன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டின் சிறுமலை பொன்னுருவி சூழலியல் சுற்றுலா மேலாண்மை குழுவிற்கும், குஜராத்தின் ஸ்ரீ மகாவீர் மச்சிமார் கூட்டுறவு சங்கத்திற்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
உமேஷ் பாரத் கல்சர்பே, அஸ்வின்சின் கிரித்சின் ஜடேஜா மற்றும் பஹ்ரைச் மனித-வனவிலங்கு மோதல் மேலாண்மை குழு ஆகியோர் விருது பெற்றனர்.
அசாமின் நமேரி புலிகள் காப்பகத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
கடல்சார் பாதுகாப்பு என்ற கருப்பொருளில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாதுகாக்கப்பட்ட கடல்சார் பகுதிகள், கடல் ஆமைகள் மற்றும் கடல் பசுக்கள் மீட்பு குறித்த அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அத்துடன், சிறிய வகை காட்டுப் பூனைகள் குறித்த கையேடும் வெளியிடப்பட்டது.
மேலும், சாலைகள், பாதுகாப்புக் கட்டமைப்புகள் மற்றும் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட 133 வளர்ச்சி திட்டங்களுக்கு வனவிலங்கு வாரியத்தின் அனுமதி வழங்குவது தொடர்பான முன்மொழிவுகள் குறித்தும் நிலைக்குழு விரிவாக பரிசீலித்தது.