

மேகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியதால், அப்பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு கோரி ஜான் கென்னடி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பல்வேறு முக்கிய வாதங்கள் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் 4,600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அங்கு பல ஏக்கர் நிலங்களில் இலவும் பஞ்சு பயிரிடப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் சில குடும்பத்தினர் பல தலைமுறைகளாக அங்கு வசித்து வரக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதன் பிறகு இங்கிருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள்.. பழங்குடியினர் பலர் நூறாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். எனவே இவையெல்லாம் ஆலோசனை நடத்தி அதன்பிறகு அதில் தீர்வு ஏற்பட்ட பிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள விடுதிகளை வெறுமனே மூடினால் மட்டும் போதாது, முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்குள் எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் அனுமதிக்க முடியாது. மேலும் இலவம் பஞ்சுகள் பயிரிடப்பட்ட பகுதிகளும் உடனடியாக முழுமையாக கைப்பற்றப்பட வேண்டும். அங்குள்ள இலவம் பஞ்சுகள் தோட்டம் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு இடம் கைப்பற்றப்பட வேண்டும் என திட்டவட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் யாருக்கும் எக்காரணம் கொண்டும் பட்டா வழங்கக் கூடாது. ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ராணுவம் வர வேண்டி இருக்கும் என கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.