

புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடியை ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவும் சூழலுக்கு பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே வழி என பிரதமரிடம் மெகபூபா முப்தி வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு பிறகு வன்முறை அதிகரித்தது குறித்தும் மெகபூபா முப்தி மோடியிடம் பேசியதாக தெரிகிறது. இதன்பிறகு மத்திய உள்துறை அமச்சர் ராஜ்நாத்சிங்கையும் மெகபூபா முப்தி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மெகபூபா முப்தி, அடுத்த இரண்டு,மூன்று மாதங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காஷ்மீரில் நிலவும் சூழலை மேம்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இது தொடர்பாக உள்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன் என்றார்.