மெகபூபா முப்தி மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் - தேசிய மாநாடு கட்சி கண்டனம்

மெகபூபா முப்தி மீண்டும் தடுப்புக்காவலிலும், அவரது மகள் வீட்டுச்சிறையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு தேசிய மாநாடு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மெகபூபா முப்தி மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் - தேசிய மாநாடு கட்சி கண்டனம்
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தது. அப்போது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கிற விதத்தில் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

14 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்போது மறுபடியும் தான் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தன் மகள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மெகபூபா தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

நான் மீண்டும் சட்டவிரோதமாக தடுத்து காவலில் வைக்கப்பட்டுள்ளேன். கடந்த 2 நாட்களாக காஷ்மீர் நிர்வாகம் புல்வாமாவில் உள்ள வாகித் உர் ரகுமான் பர்ராவின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்க மறுத்து விட்டது. காஷ்மீரின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வர பா.ஜ.க. மந்திரிகளும், அவர்களது கைப்பாவைகளும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் எனக்கு மட்டும் பாதுகாப்பு ஒரு பிரச்சினை ஆகி இருக்கிறது.

அவர்களின் கொடுமைக்கு எல்லையே இல்லை. வாகித் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக்கூட எனக்கு அனுமதி இல்லை. என் மகள் இல்திஜா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். ஏனென்றால் அவரும் வாகித் குடும்பத்தினரை சந்திக்க விரும்பினார்.

இவ்வாறு அவற்றில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் முப்திபா முப்தி, மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டபோது, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவை கோரியதாக வாகித் உர் ரகுமான் பர்ராவை தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அவரது குடும்பத்தினரை சென்று பார்க்க திட்டமிட்டிருந்த நிலையில்தான் மெகபூபா தடுப்பு காவலிலும், அவரது மகள் வீட்டுச்சிறையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நடவடிக்கைக்காக காஷ்மீர் நிர்வாகத்துக்கு தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com