மேகதாது விவகாரம்: மத்திய நீர்வளத்துறை மந்திரியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை மந்திரியை தமிழக அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசினர்.
மேகதாது விவகாரம்: மத்திய நீர்வளத்துறை மந்திரியுடன்  தமிழக அமைச்சர்கள் சந்திப்பு
Published on: 

புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு கடந்த 13-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். மைசூரில் நடைபெற்ற, விண்வெளி மற்றும் நவீன ஒளியியல் அறிவியல் மையத்தின் தொடக்க விழாவில்ம் பிரதமர் மோடி முன்னிலையில், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உரையாற்றினார்.அப்போது அவர்., காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது.

மேகதாது அணைத் திட்டத்தைச் செயல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கான இறுதி அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் நேரடியாக வலியுறுத்தினார். மேலும் அவர், தமிழகத்திற்கு 177 டி.எம்.சி. காவிரி நீரைத் திறந்துவிட வேண்டிய நிபந்தனையை கர்நாடக அரசு நிச்சயம் கடைப்பிடிக்கும் என்றும், மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கே அதிக பயன் கிடைக்கும் என்றும் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் குறிப்பிட்டார்.

பிரதமரை சந்திக்க வலியுறுத்தல்

அவரது இந்தப் பேச்சு, தமிழகத்தில் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. மேகதாது அணை விவகாரத்தை மீண்டும் தமிழகத்தில் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதி இருந்தார்.அதில், கர்நாடக முதல்-மந்திரியின் பேச்சு, தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதோடு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுடன், மேகதாது அணைக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தையும் பிரதமர் மோடியிடம் நேரில் அளிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

டெல்லி பயணம்

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் கடந்த 16-ந் தேதி டெல்லிக்கு சென்றார். அவருடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் சென்றிருந்தனர். அங்கு, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி எழுதிய, ‘பிலாங்கிங் – எ ஜர்னி ஆப் லவ்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில், முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் பங்கேற்றிருந்தார்.

மத்திய அரசு ஏற்கக் கூடாது

அதைத் தொடர்ந்து அன்றிரவே முதல்-அமைச்சர் விஜய் சென்னை திரும்பினார். ஆனால் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் டெல்லியில் தங்கிவிட்டனர். இந்த நிலையில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்தும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் டெல்லியில் மத்திய ஜல்சக்தித் துறை மந்திரி சி.ஆர்.பட்டீலை இன்று சந்தித்து பேசினர். அப்போது கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், மேகதாது விஷயத்தில் கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. அவரது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

X