

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் மதுரா பகுதியை சேர்ந்தவர் அனுராக் சிங் (வயது 45). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி பிரியங்கா (40) என்ற மனைவியும், அர்னவ் (12), ஆதித்யா (8) என்ற 2 மகன்களும், ஆர்வி (8) என்ற மகளும் இருந்தனர்.
இவர்களுடன் அனுராக் சிங்கின் தாய் சாவித்ரியும் (62) ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அனுராக் சிங் சமீபகாலமாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை அனுராக் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தனது தாயின் அறைக்கு சென்றார். பெற்ற தாய் என்றும் பாராமல் சாவித்ரியை அனுராக் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடித்து இறந்தார்.
துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் அனுராக்கின் மனைவி மற்றும் பிள்ளைகள் பதறிப்போய் ஓடி வந்தனர். அவர்களையும் அனுராக் குருவியை சுடுவதுபோல சுட்டுத்தள்ளினார்.
இதில் அவர்கள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சற்றும் ஈவு இரக்கமின்றி குடும்பத்தினர் 5 பேரையும் சுட்டுக்கொன்ற அனுராக் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இதில் உடலில் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் 6 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அனுராக் இந்த விபரீத முடிவை எடுத்தற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.