

லக்னோ,
நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கின. பேருந்து, ரெயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
எனினும், சரக்கு ரெயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று உத்தர பிரதேசத்திலும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. அவற்றில் மெட்ரோ ரெயில் சேவையும் ஒன்று.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, லக்னோ நகரில் மெட்ரோ ரெயில் சேவை இன்று முதல் தொடங்க உள்ளது. இதனால், ரெயில் பயணிகளின் பாதுகாப்பினை கவனத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் நிலைய வளாக பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டன.
இதேபோன்று, மெட்ரோ ரெயில்களில் பொதுமக்கள் பயணிக்க கூடிய ரெயில் பெட்டிகளிலும், அவற்றின் இருக்கைகளிலும் தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.