

புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல் வங்கியை பயன்படுத்தி ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி மெகுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்திருந்தார். அங்கிருந்து கடந்த மே 23-ந் தேதி அவர் டோமினிக்கா நாட்டுக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோதமாக நுழைந்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கு, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி, டோமினிக்கா ஐகோர்ட்டில் மெகுல் சோக்சி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஆன்டிகுவா நாட்டில் இருந்து என்னை இந்திய நபர்கள் கடத்தி, வலுக்கட்டாயமாக டோமினிக்காவுக்கு கொண்டு வந்தனர். டோமினிக்கா போலீசிடம் நான் இதை சொன்னபோது, அவர்கள் விசாரிக்க முன்வரவில்லை.
இந்த வழக்கை டோமினிக்கா போலீஸ் துறை தலைவர், வழக்கின் விசாரணை அதிகாரி ஆகியோர் சுதந்திரமாக முடிவெடுத்து தொடரவில்லை.
இந்திய அரசின் கட்டளைப்படி அவர்கள் செயல்பட்டுள்ளனர். என்னை கடத்தியதில் பங்கேற்றோ அல்லது கடத்தியவர்களுக்கு துணைபுரிந்தோ அவர்கள் செயல்பட்டுள்ளனர். இது, கோர்ட்டை தவறாக பயன்படுத்தும் செயல்.
என்னை சட்டவிரோதமாக குடியேறியவராக குடியேற்றத்துறை மந்திரி அறிவித்தது, இயற்கை நீதிக்கும், சட்டத்துக்கும் புறம்பானது. எனவே, அதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். என் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மெகுல் சோக்சி கூறியுள்ளார்.