

ஸ்ரீநகர்,
சோபியானின் இமாம் சாகிப் பகுதியில் பாதுகாப்பு படையினர் வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அப்பகுதியில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை பாதுகாப்பு படை மேற்கொண்டது. அப்போது அங்கு வீட்டிற்குள் மறைந்திருந்து பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் கொடுத்தனர். இருதரப்பு இடையே நீண்ட நேர சண்டை வெடித்தது. பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடி பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். உடனடியாக சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பயங்கரவாதிகள் எங்கும் தப்பிவிட முடியாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் கிராமத்தை சுற்றிலும் போடப்பட்டது.
மூன்று பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக முன்னதாக தகவலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் மற்றொரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டான். இதற்கிடையே மற்றொரு பயங்கரவாதி மட்டும் கட்டிட இடிபாடுக்குள் இருந்து துப்பாக்கி சூடு நடத்தினான். உடனடியாக பாதுகாப்பு படையினர் சரண் அடையுமாறு கேட்டுக் கொண்டனர். பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுப்பதாக கூறி அழைத்து உள்ளனர். இதனையடுத்து பயங்கரவாதி ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வெளியே வந்து கீழே படுத்து சரண் அடைந்தான்.
சரண் அடைந்த பயங்கரவாதி அடில் என் அடையாளம் காணப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம்தான் அடில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தப்பிக்க இடமில்லாது பாதுகாப்பு படைகள் சுற்றி வளைத்த பின்னர் அடில் சரண் அடைந்து உள்ளான். கடந்த சில மாதங்களில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெறும் சண்டையில் பயங்கரவாதி சரண் அடைவது இதுவே முதல் முறையாகும். பயங்கரவாதி அடில் சோபியான் மாவட்டம் சிதிபோராவை சேர்ந்தவன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதி அடிலை கைது செய்து போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்று உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதில் இருந்து இளைஞர்கள் பயங்கரவாத பாதையை தேர்வு செய்வது அதிகரித்து உள்ளது என ஏற்கனவே போலீஸ் தெரிவித்திருந்தது. யாரும் பயங்கரவாத பாதையை தேர்வு செய்யவேண்டாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆயுதம் எடுத்த இளைஞர்கள் சரண் அடைய வேண்டும், அரசு அவர்களுடைய வழக்குகள் குறித்து பரிசீலனை செய்யும் என போலீஸ் அறிவுரை வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.