

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் (சி.ஆர்.பி.எப்.) 2,500 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற 2 பஸ்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றி சென்ற வாகனம் கொண்டு மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் 8 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. பல வீரர்கள் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலர் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
இந்த சம்பவத்திற்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகளான உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதேபோன்று தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடியும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.