

புதுடெல்லி,
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கியதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதில் மேற்கு வங்காளத்தில் இயங்கி வரும் மொய்ரா, மதுஜோர் ஆகிய சுரங்கங்களை வி.எம்.பி.எல் எனப்படும் தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா, நிலக்கரி அமைச்சக இணை செயலாளர் கிரோபா, இயக்குனர் சாம்ரியா ஆகியோர் மீது 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைப்போல வி.எம்.பி.எல். நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் விகாஸ் பாட்னி, நிர்வாகி ஆனந்த் மாலிக் ஆகியோர் மீதும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்குகளின் விசாரணை டெல்லி சிறப்பு கோர்ட்டில் நடந்தது.
இதில் விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் மற்றும் வி.எம்.பி.எல் நிறுவனமும் குற்றவாளிகள் என கடந்த 30-ந் தேதி நீதிபதி பரத் பிரசார் அறிவித்தார். அவர்களது தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் கிரோபா, சாம்ரியா ஆகிய 3 பேருக்கும் 3 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதைப்போல விகாஸ் பாட்னி, ஆனந்த் மாலிக் ஆகிய இருவருக்கும் 4 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதில் பாட்னிக்கு ரூ.25 லட்சமும், மாலிக்குக்கு ரூ.2 லட்சமும் அபராதம் விதித்த நீதிபதி, வி.எம்.பி.எல் நிறுவனத்துக்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
பின்னர் 3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற குப்தா உள்ளிட்ட 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எனினும் பாட்னி, மாலிக் ஆகிய இருவரும் உடனடியாக சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த வழக்கையும் சேர்த்து இதுவரை 6 சுரங்க முறைகேடு வழக்குகளில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் மேலும் 2 வழக்குகளில் குப்தாவுக்கு முறையே 2 மற்றும் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.