

திஸ்பூர்,
அசாம் மாநிலம் தமுல்பூர் மாவட்டம் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் பிரபல பிஹு நடனக் கலைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு நோவாக்காட்டா பகுதியில் பிஹு நடனக் கலைஞர்கள் பயணித்த மினி பேருந்து, எதிரே வந்த டிரெய்லர் லாரியுடன் பலமாக மோதியது.
இந்த விபத்தில் பிரபல நடனக் கலைஞர் நிஷாமோனி ஹலோய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குழுவைச் சேர்ந்த 11 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கௌஹாத்தியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நிஷாமோனி ஹலோய் மற்றும் அவரது குழுவினர், அருகிலுள்ள பகுதியில் நடைபெறவிருந்த பிஹு கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. பிரபல நடனக் கலைஞரின் மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.