என்ஜினீயர் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மந்திரி - ஜாமீனில் விடுவிப்பு

என்ஜினீயர் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மந்திரி ஜித்தேந்திர அவாத் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
என்ஜினீயர் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மந்திரி - ஜாமீனில் விடுவிப்பு
Published on

மும்பை,

மராட்டிய வீட்டு வசதித்துறை மந்தியாக இருப்பவர் ஜித்தேந்திர அவாத். தேசியவாத காங்கிரசில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான இவர் மீது கடந்த ஆண்டு சிவில் என்ஜினீயர் ஆனந்த் கர்முசே என்பவர் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், போலீசார் 2 பேர் அவரை வழக்கு விசாரணைக்கு என கூறி மந்திரி ஜித்தேந்திர அவாத்தின் பங்களாவுக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு போலீசார் மற்றும் ஜித்தேந்திர அவாத் முன்னிலையில் ஒரு கும்பல் அவரை பெல்ட் உள்ளிட்டவற்றால் தாக்கியதாகவும் கூறியிருந்தார்.

ஜித்தேந்திர அவாத் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆனந்த் கர்முசே கூறியிருந்தார். இந்த புகார் குறித்து தானே வாதக்நகர் போலீசார் ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக மந்திரி ஜித்தேந்திர அவாத் திடீரென கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தானே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை ஜாமீனில் விடுவித்தது.

ஆளுங்கட்சியை சேர்ந்த மந்திரி ஒருவர் உள்ளூர் போலீசாரால் கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் குற்ற வழக்கில் கைதான மந்திரி ஜித்தேந்திர அவாத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட மத்திய மந்திரி நாராயண் ரானேயை பா.ஜனதா பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சிவசேனா பதிலடி கொடுத்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com