பா.ஜனதா ஆட்சியில் கோடை காலத்திலும் மழை பெய்து ஏரிகள் நிரம்புகின்றன; மந்திரி ஆர்.அசோக் பேட்டி

பா.ஜனதா ஆட்சியில் கோடை காலத்திலும் மழை பெய்து ஏரிகள் நிரம்புகின்றன என்று மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.
பா.ஜனதா ஆட்சியில் கோடை காலத்திலும் மழை பெய்து ஏரிகள் நிரம்புகின்றன; மந்திரி ஆர்.அசோக் பேட்டி
Published on

கொள்ளேகால்:

பா.ஜனதா ஆட்சியில் கோடை காலத்திலும் மழை பெய்து ஏரிகள் நிரம்புகின்றன என்று மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.

மந்திரி ஆர்.அசோக் பேட்டி

மாநில வருவாய்த்துறை மந்திரியான ஆர்.அசோக், சாம்ராஜ்நகருக்கு சென்று மழையால் பாதித்த இடங்களை பார்வையிட்டார்.

இதற்கிடையே அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது முதல் தொடர் மழை பெய்து வருகிறது. கோடை காலத்திலும் கனமழை பெய்து ஏரிகள் நிரம்புகின்றன.

இதனால் கடந்த 3 ஆண்டுகளாக, மக்கள் சூரிய அஸ்தமனத்தை பார்த்திருக்கமாட்டார்கள். தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாத நிலை உருவாகவில்லை. மேகதாது திட்டம் விவகாரம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய அரசிடம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார்.

மாநிலத்தில் மழைக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மழையால் பாதித்த இடங்களை காங்கிரசார் பார்வையிடவில்லை. ஆனால் சித்தராமோற்சவா என்ற பெயரில் காங்கிரசார், மைசூர் பாகு சாப்பிட்டுள்ளனர்.

பிறந்ததேதி தெரியாது என்று சித்தராமையா கூறியுள்ளார். அப்படி இருக்கையில் வேறுநாளில் பிறந்த நாளை கொண்டாடி இருக்கலாம்.

ஆனால் மழை, கொலை சம்பவங்களை தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அரசின் ஓராண்டு சாதனை விளக்க மாநாடு ரத்து செய்யப்பட்டது. 100 காங்கிரஸ் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி பா.ஜனதாவுக்கு உள்ளது. மக்கள், காங்கிரசை புறக்கணித்துவிட்டனர். கோவா, மராட்டியம், உ.பி.யில் நடந்தது அனைவருக்கும் தெரியும்.

எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ.யை தடை....

எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புகளை தடை செய்ய விரும்புவர்களில் நானும் ஒருவன். அந்த நிலைப்பாட்டையே மத்திய அரசும் கொண்டுள்ளது. ஆனால் ஒரு அமைப்பு தடை செய்யப்பட்டால், அது வேறு பெயரில் உருவாகிறது.

எனவே, இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜனதா ஆட்சியில் அந்த அமைப்புகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com