

புதுச்சேரி,
புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. குற்றச்சாட்டு
புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் எந்தவிதமான வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று தி.மு.க. கூறியது. அப்போதெல்லாம் எதையாவது கூறி ஆட்சியாளர்கள் மறுத்துவந்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.வே இந்த ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று தற்போது தெளிவாக கூறியுள்ளது. அதேபோல் வேளாண்துறை அமைச்சரும் இந்த ஆட்சியில் விவசாயிகள் நிம்மதியாக இல்லை என்று கூறியுள்ளார்.
அ.தி.மு.க. அவைத்தலைவர் ராமதாஸ் கூறியுள்ள குற்றச்சாட்டில், புதுவை வளர்ச்சி பற்றி கவர்னரின் கருத்துகள் மிகைப்படுத்தப்பட்டு ஆதாரமற்றவையாக உள்ளது என்று கூறியுள்ளார்.
கடனில் மூழ்கிய அரசு
தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றை புனரமைப்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. இதனால் வேலைவாய்ப்பின்மையும், வருமான வாய்ப்பையும் மக்கள் இழந்து வருகின்றனர். மின் உற்பத்தி திறன் உயரவில்லை. ஜி.எஸ்.டி. வரிகளால் வணிகம் பாதித்துள்ளது.
மத்திய அரசின் நிதி ஆயோக் நீடித்த நிலைத்த வளர்ச்சிக்காக அறிவித்துள்ள 13 குறிக்கோள்களில் எதையாவது புதுச்சேரி அரசு அடைந்துள்ளதா? 11 ஆண்டுகளாக முழு பட்ஜெட் போடாத, மூலதன செலவை அதிகரிக்காத திட்டக்குழுவின் ஆலோசனை கூட்டத்தை கூட்டாத கடனில் மூழ்கியுள்ள, மத்திய அரசிடம் உரிய நிதியை பெற முடியாத புதுச்சேரி அரசு எப்படி அனைத்து துறையிலும் வளர்ச்சியை உருவாக்க முடியும்?
பதிலளிக்கவேண்டும்
புதுவை வந்த உள்துறை மந்திரி அமித்ஷா எத்தனை புதிய திட்டங்களையும், அதற்கான நிதியையும் டெல்லியில் இருந்து கையோடு கொண்டு வந்து புதுச்சேரிக்கு கொடுத்தார்? என்று அ.தி.மு.க. கேட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்காவிட்டாலும், தற்போது கூட்டணி கட்சியான அ.தி.மு.க. கூறியதற்கும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவரே கூறியதற்கும் இந்த அரசும், கவர்னரும் பதில் அளிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.