

புதுடெல்லி
ஜப்பான் பிரதமராக கடந்த ஆண்டு பதவியேற்ற சனே தகாய்ச்சி இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இந்தியாவின் தலைநகர் புதுடெல்லிக்கு இன்று வருகை தந்த அவரை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார்.
கடந்த ஆண்டு பதவியேற்ற பின்னர் தகாய்ச்சி மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும். இந்த பயணத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் பற்றி அவர் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல், குறைகடத்திகளுக்கான உறுதியான விநியோக சங்கிலிகளை மேம்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் (ஏ.ஐ.) ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல் ஆகிய விசயங்கள் அவருடைய இந்த பயணத்தின் முக்கிய நோக்கங்களாக இருக்கும். புதுடெல்லியில் 16-வது இந்திய-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு நடைபெறுகிறது. அதில் அவர் பங்கேற்கிறார்.
புதுடெல்லியில் நாளை நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், தகாய்ச்சியும் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த உச்சிமாநாட்டு நிகழ்ச்சிக்கு பின்னர், தலைவர்கள் இருவரும், பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு தொடர்பாக கூட்டு அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிடுவார்கள். இந்த சந்திப்பின்போது இரு தரப்பிலும் 10 ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று, கூட்டு பொருளாதார மாநாட்டிலும் தகாய்ச்சி கலந்து கொள்ள உள்ளார். வர்த்தகம், முதலீடு, பொருளாதார பாதுகாப்பு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், கலாசாரம் உள்பட பரவலான துறைகளில் நாடுகளிடையே ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் வகையில் அவருடைய இந்த பயணம் அமையும்.
கூட்டு பொருளாதார மாநாட்டில், பல்வேறு தலைமை செயல் அதிகாரிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஜப்பானிய வணிக தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.