

புதுடெல்லி,
தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக இருக்கும் கே.பாண்டியராஜன் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அப்போது அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஆவடி நாசர், பாண்டியராஜன் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக தெரிவித்து, வழக்கை மேற்கொண்டு விசாரித்தார்.இதனையடுத்து தனக்கு எதிராக நடக்கும் தேர்தல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் பாண்டியராஜன் சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.இதைத்தொடர்ந்து, ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து பாண்டியராஜன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விசாரணையில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறி அமைச்சர் கே.பாண்டியராஜனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.