

புதுடெல்லி,
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இவர்கள் 7 பேரும் கடந்த 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதையடுத்து தமிழக அமைச்சரவை இவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இத் தீர்மானம் தமிழக கவர்னருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால் இவர்கள் எந்த நேரமும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்க்கப்பட்டது. ஆனால் இதுவரை விடுதலை ஆகவில்லை. சிறையில் வாடும் தனது மகனை தமிழக கவர்னர் கையெழுத்திட்டு உடனே விடுதலை செய்யவேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே, ஆயுள்தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2016ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது பதில் அளித்து உள்ளது.
அதில், 7 பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசு எடுக்கும் முடிவில் மத்திய அரசு தலையிட முடியாது. அதேபோல் சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் குற்றவாளிக்கு விதித்த தண்டனையை குறைக்கவும், மத்திய அரசு தலையிட எந்த சட்டமும் வகுக்கப்படவில்லை என்று கூறப்பட்டு உள்ளது.
இதுபற்றி பேரறிவாளனின் வக்கீல் சிவா கூறுகையில், 7 பேரையும் விடுதலை செய்யவேண்டிய உரிய அரசு, தமிழக அரசுதான் என்று மத்திய அரசே ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய அரசின் பதில் 7 பேரையும் விடுதலையை நோக்கி கொண்டு செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.