18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க தடை விதிக்கப்படுமா..?

இந்த பிரச்சினையை மத்திய அரசு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க தடை விதிக்கப்படுமா..?
Published on: 

புதுடெல்லி,

சமூக வலைத்தளங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கணக்கு தொடங்க தடை விதிப்பது உள்ளிட்ட சட்ட பாதுகாப்பை உருவாக்குவது பற்றி ஆய்வு செய்யுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெற்றோரின் அனுமதியின்றி

சுப்ரீம் கோர்ட்டில் 'ஜஸ்ட் ரைட்ஸ் பார் சில்ட்ரன் அலயன்ஸ்' என்ற தொண்டு நிறுவனம் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், "இந்திய சட்டங்கள், 18 வயதுக்குட்பட்டவர்களை 'மைனர்' என்று கருதுகின்றன. ஆனால், பேஸ்புக், ஸ்னாப்சாட் ஆகிய சமூக வலைத்தளங்கள் 13 வயதில் இருந்தே கணக்குகளை உருவாக்க அனுமதிக்கின்றன.

18 வயதுக்குட்பட்டோருடன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம் செல்லாது என்று இந்திய சட்டங்கள் குறிப்பிடுகின்றன. அதையும் மீறி, வயதை சரிபார்க்கும் வழிமுறையோ, ஒழுங்கு விதிமுறைகளோ இல்லாததால், சமூக வலைத்தளங்கள் இதுபோன்று செயல்படுகின்றன.

ஆகவே, எந்த சமூக வலைத்தளமும் பெற்றோரின் அனுமதியின்றி, சிறுவர்களை கணக்கு தொடங்க அனுமதிக்காதவகையில் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை நிறுவன ஒழுங்குவிதிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறி முறை சட்டம்) விதிமுறைகள் 2021-ல் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, கடந்த 10-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் வக்கீல் எச்.எஸ்.பூல்காவின் வாதங்களை நீதிபதிகள் குறித்துக் கொண்டனர். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் பதிலை கேட்டனர்.

கட்டுப்பாடுகள்

இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் இம்மனு விசாரணைக்கு வந்தது.

மனுதாரரின் வக்கீல் எச்.எஸ்.பூல்கா வாதிடுகையில், "சமூக வலைத்தள நிறுவனங்கள் கட்டுப்படும்வகையில், தானாக கடைப்பிடிக்கும் வழிகாட்டுதல்களாக இல்லாமல், அமல்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

வேண்டுகோள் அல்ல, உத்தரவு

அதற்கு நீதிபதி ஜோய்மால்யா பாக்சி கூறுகையில், ”18 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தள கணக்குகளை தொடங்க தடை விதித்தல் உள்பட சிறுவர்கள் தொடர்பான இந்திய சட்டங்களுக்கு சமூக வலைத்தள நிறுவனங்கள் கட்டுப்படும்வகையில் சட்டப்பூர்வ கட்டமைப்பை நடைமுறைப்படுத்த முடியுமா என்று மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

இந்திய சட்டங்களுக்கேற்ப சமூக வலைத்தளங்கள் தங்களது மென்பொருளை மாற்றி அமைக்குமாறு உத்தரவிட வேண்டும். இது வேண்டுகோள் அல்ல, உத்தரவு” என்று அவர் கூறினார்.

அதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ”இந்த பிரச்சினையை மத்திய அரசு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும். ஏதாவது செய்ய வேண்டும். செய்வோம்” என்று அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com