புதிய வேளாண் சட்டம் பற்றிய சரத்பவாரின் தகவல் தவறானது: வேளாண் துறை அமைச்சர்

புதிய வேளாண் சட்டம் குறைந்தப்பட்ச கொள்முதல் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என சரத்பவார் விமர்சித்து இருந்தார்.
புதிய வேளாண் சட்டம் பற்றிய சரத்பவாரின் தகவல் தவறானது: வேளாண் துறை அமைச்சர்
Published on

மும்பை,

மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வேளாண் சட்டம் குறித்து டுவிட்டால் கூறியிருப்பதாவது:-

சீர்திருத்தம் என்பது தொடர்ச்சியான செயல்முறையாகும். ஏ.பி.எம்.சி. அல்லது மண்டிகளில் சீர்திருத்தங்கள் செய்வதற்கு எதிராக யாரும் வாதிடமாட்டார்கள். நேர்மறையாக பேசுவதால், அந்த முறையை வலுவிழக்க செய்தல் அல்லது அழித்துவிடுவோம் என அர்த்தம் கொள்ள முடியாது. நான் வேளாண்துறை மந்திரியாக இருந்த போது விவசாயிகளுக்கு மாற்று வசதியாக சிறப்பு சந்தைகள் உருவாக்க திருத்தங்கள் செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஏற்கனவே இருந்த மண்டி முறையை வலுப்படுத்த அதிகம் கவனம் மேற்கொள்ளப்பட்டது.

புதிய வேளாண் சட்டம் மண்டி முறையின் அதிகாரத்தை தடுக்கிறது. புதிய வேளாண் சட்டம் குறைந்தப்பட்ச கொள்முதல் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் மண்டி முறையை வலுவிழக்க செய்யும். குறைந்தபட்ச கொள்முதல் விலை உறுதி செய்யப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்தமும் எனக்கு கவலையை அளிக்கிறது. அதன்படி வேளாண் பொருட்கள் விலை 100 சதவீதமும், கெட்டுப்போகாத பொருட்கள் விலை 50 சதவீதமும் உயர்ந்தால் மட்டுமே அதில் அரசு தலையிடும் என கூறப்பட்டுள்ளது.

உணவு தானியம், வெங்காயம், உருளைகிழங்கு போன்றவற்றை இருப்பு வைக்க இருந்த உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. இதனால் கார்பரேட் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி, மக்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.

ஆனால், இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சரத் பவாரின் தகவல் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com