தயார்நிலையில் இந்திய கடற்படை: போர்க்கப்பல்களில் ஏவுகணை சோதனை - அரபிக்கடலில் நடந்தது

பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த நேரமும் போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
தயார்நிலையில் இந்திய கடற்படை: போர்க்கப்பல்களில் ஏவுகணை சோதனை - அரபிக்கடலில் நடந்தது
Published on

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.குறிப்பாக பாகிஸ்தான் உடனான சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து, நாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காஷ்மீரில் பயங்கரவாதிகளின் வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

இதேபோல நாட்டின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நாட்டின் எல்லை பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ராணுவ தளபதி உபேந்திரா திவேதி ஆய்வு செய்தார்.

பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த நேரமும் போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.இந்தநிலையில் இந்திய கடற்படை அரபிக்கடலில் எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை ஏவுகணை மூலம் அழிக்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இதனை கடற்படை நேற்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய கடற்படை தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

இந்திய கடற்படை போர்க்கப்பல்களில் நீண்ட தூரம் சென்று எதிரிகளின் போர் கப்பல்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. நம் நாட்டின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. தேச நலனை பாதுகாப்பதற்கான பணியில் எந்த நேரமும், எந்த தாக்குதலுக்கும் இந்திய கடற்படை தயாராக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com