ஜெகநாதர் கோவில் கருவூல அறை சாவிகள் மாயம்; அபிடவிட் சமர்ப்பிக்க ஆட்சியருக்கு ஆணையம் உத்தரவு

பூரி ஜெகநாதர் கோவில் கருவூல அறை சாவிகள் மாயமான விவகாரத்தில் ஆகஸ்டு 7ந்தேதிக்குள் அபிடவிட் தாக்கல் செய்யும்படி பூரி ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஜெகநாதர் கோவில் கருவூல அறை சாவிகள் மாயம்; அபிடவிட் சமர்ப்பிக்க ஆட்சியருக்கு ஆணையம் உத்தரவு
Published on

பூரி,

ஒடிசாவில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ரத்னா பந்தர் எனப்படும் கருவூலத்திற்கு இரு அறைகள் உள்ளன. அவற்றிற்கு என 3 சாவிகள் உள்ளன.

ஒரு சாவி கோவில் கருவூலரிடமும், மற்றொரு சாவி பூரி அரசரிடமும், 3வது சாவி கோவில் நிர்வாகத்திடமும் இருக்கும். இந்த சாவிகள் கோவில் கருவூலத்தின் இரு அறைகளை திறப்பதற்கு பயன்படும்.

ஆனால் ரத்னா பந்தர் எனப்படும் கருவூலத்திற்கு 3வது அறையும் உள்ளது. இது உள்கருவூலம் எனப்படுகிறது. இதற்கு ஒரே ஒரு சாவி உண்டு. இது திறக்கப்படாமல் பல ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கோவில் கருவூலத்தில் கடந்த ஏப்ரல் 4ந்தேதி ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் பல ஆண்டுகளாக கோவில் கருவூலத்தின் மூன்றாவது அறை திறக்கப்படாமல் இருந்ததற்கான மர்மம் தெரிய வந்தது. அந்த அறைக்கான சாவி காணாமல் போயுள்ளது. இதனால் அறை திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது.

ஸ்ரீஜெகந்நாத கோவில் சட்டத்தின்படி, இந்த சாவி மாநில அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

அந்த ஆய்வுக்கு பின் அரசு கருவூல அதிகாரியிடம் சாவியை கண்டுபிடிக்கும்படி மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டார். இதில், கடந்த 1985ம் ஆண்டு ரத்னா பந்தர் திறந்து மூடப்பட்ட பின்பு கருவூலத்திடம் சாவி ஒப்படைக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து சாவி எங்குள்ளது என கண்டறிய கோவிலில் உள்ள பழைய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த நிலையில் 17 பேர் கொண்ட குழு ஒன்று கருவூல அறையின் ஜன்னலின் வழியே முதற்கட்ட ஆய்வை நடத்தியது. அதில், அதன் உள் அறைகளின் சுவர்களில் விரிசல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஒடிசாவில் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் கருவூல அறை சாவிகள் மாயமான விவகாரம் தெரிய வந்ததனை அடுத்து இதுபற்றி விசாரிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் குரல்கள் எதிரொலித்தன. ரத்னா பந்தரில் உள்ள விலை மதிப்புமிக்க ஆபரணங்களின் பாதுகாப்பு பற்றி எதிர்க்கட்சிகளும் கவலை தெரிவித்தன.

இதனை தொடர்ந்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் கடந்த ஜூன் 4ந்தேதி நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார். அதனை அடுத்து ஜூன் 6ந்தேதி நீதிபதி ரகுபீர் தாஸ் தலைமையில ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற தொடங்கியது. 3 மாதங்களுக்குள் மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஆணையத்திடம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இதுவரை ஆணையம் 4 அபிடவிட்டுகளை பெற்றுள்ளது. ஆனால் அவற்றில் போதிய சான்றுகளோ அல்லது உண்மைகளோ இல்லை என்பதனால் அதுபற்றி விசாரணை நடத்த போவதில்லை என ஆணையம் முடிவு செய்துள்ளது என நீதிபதி தாஸ் கூறினார்.

இந்த நிலையில் நீதிபதி தாஸ் இந்த விவகாரம் பற்றிய முதல் விசாரணையை இன்று தொடங்கினார்.

இவ்விவகாரம் பற்றிய விளக்க தகவல் எதனையும் பூரி மாவட்ட நிர்வாகம் வழங்காத நிலையில் விசாரணை முழுமை பெறவில்லை.

அதனால் வருகிற ஆகஸ்டு 7ந்தேதிக்குள் விளக்க விவரங்கள் அடங்கிய அபிடவிட் ஒன்றை ஆணையத்திடம் பூரி மாவட்ட ஆட்சியர் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனை பெற்ற பின்பே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆணையம் முடிவெடுக்கும் என தாஸ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com