அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதா? - மத்திய அரசு விளக்கம்

அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதா? - மத்திய அரசு விளக்கம்
Published on

கொல்கத்தா,

இந்தியாவில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மேற்குவங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மம்தா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் செயல்பட்டு வரும் அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனங்களில் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு முடக்கியுள்ளது என்பதை கிறிஸ்துமஸ் அன்று கேட்க மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

22 ஆயிரம் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் இன்றி தவிக்கவிடப்பட்டுள்ளனர். சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளில் சமரசம் செய்யக்கூடாது' என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட எந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் கணக்குகளையும் மத்திய அரசு முடக்கவில்லை. அதேவேளை தங்கள் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கும்படி அந்த தொண்டு நிறுவனமே ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா வங்கியிடம் கேட்டுக்கொண்டதாக அந்த வங்கி மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் பதிவை நீட்டிப்பதற்கான விண்ணப்பம் 2021 டிசம்பர் 25-ம் தேதி நிராகரிக்கபட்டுள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை விதிகளின் தகுதி நிபந்தனைகளை அந்த தொண்டு நிறுவனம் எட்டவில்லை. இதனால், அந்த தொண்டு நிறுவனத்தில் பதிவு புதுப்பித்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் பதிவு அக்டோபர் 31-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. ஆனால், பிற தொண்டு நிறுவனங்களை போல இந்த தொண்டு நிறுவனத்தின் மறு புதுப்பித்தல் விண்ணப்பமும் நிலுவையில் இருந்ததால் அந்த நிறுவனத்தின் பதிவு உரிமம் 31 டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த தொண்டு நிறுவனம் எதிர்மறை செயல்களில் ஈடுபட்டதால் அதன் புதுப்பித்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com