

பெங்களூரு,
பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா அதானி நகரை சேர்ந்த பெண் சுஜாதா பவார்(வயது 34). இவருக்கும், ஹருகேரியில் உள்ள ஒரு நபருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் சந்தோசமாக வாழ்ந்த இவர்களது வாழ்க்கையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவன், மனைவி 2 பேரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வசித்து வந்தனர்.
இதில் சுஜாதா பவார் தனது சொந்த ஊரான அதானிக்கு சென்று தன்னுடைய வீட்டில் தனி யாக தங்கியிருந்தார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த குமார் ஹல்லப்பா ஹவல்தார் (30) என்ற வாலிபருக்கும், சுஜாதா பவாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் 2 பேரும் சுஜாதா பவாரின் வீட்டில் வைத்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
சுஜாதா பவாருக்கு சொந்தமாக வீடு மற்றும் தோட்டம் இருந்துள்ளது. இதனை கைப்பற்ற நினைத்த குமார், சுஜாதா பவாரை 2-வதாக திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். இதற்காக சுஜாதா பவாரின் சொத்தை தனது பெயரில் எழுதி வைக்குமாறு குமார் கேட்டுள்ளார். இதற்கு சுஜதா பவார் ஒப்பு கொண்டார். ஆனால் இன்னும் கொஞ்சம் காலம் ஆகட்டும் அதன்பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று சுஜதா பவார் கூறியுள்ளார்.
ஆனால் ஆண்டுகள் கடந்தோடின. ஆனால் சுஜாதா பவார் சொத்தை அவர் பெயருக்கு மாற்ற விரும்பாமல் திருமணத்தை தள்ளிபோட்டு வந்துள்ளார். இது குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சம்பவத்தன்று சுஜாதா பவாரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற குமார், கிராமத்துக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் வைத்து சுஜாதா பவாரின் முகத்தை துணியால் மூடி கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
பின்னர் தோட்டத்து உரிமையாளர் ஒரு பெண் தனது தோட்டத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அதானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பெலகாவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் இறந்த பெண் சுஜாதா பவார் என்பதும், அவரை கொலை செய்தது அவரது கள்ளக்காதலன் குமார் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.