அதிகளவில் ஸ்டீராய்டு மருந்துகள் பயன்பாடு: கருப்பு பூஞ்சைநோய்க்கு காரணம் - எய்ம்ஸ் இயக்குநர்

ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் கருப்பு பூஞ்சைநோய் தாக்குவதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களைப் பாதித்து வருகிறது. இந்த தருணத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான, குணமாகிற நோயாளிகளுக்கு, மியூகோர்மைகோசிஸ் என்று அழைக்கப்படுகிற கருப்பு பூஞ்சைநோய் தாக்குவதை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும். இது, பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய்தான்.

கொரோனா நோயாளிகளைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு உயிரைக் காக்க தருகிற ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த நோய் தூண்டப்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் கருப்பு பூஞ்சைநோய் தாக்குவதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு ஆளாகி, உயிரிழப்பும் ஏற்படுகிறது. கணிசமாக இந்த தொற்றுக்கு ஆளாகுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று மனிதர்களுக்குப் புதிதானது அல்ல. ஏற்கெனவே காற்றில் இருப்பதுதான். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது எளிதாக மனிதர்களைத் தாக்குகிறது. காற்று, மண், உணவில் கூட இந்த கருப்பு பூஞ்சை நோய் பாக்டீரியா இருக்கும் ஆனால், இதன் தீவிரத்தன்மை மிகக்குறைவுதான்.

ஆதலால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தாலும் வெளியே செல்லும்போது, முக்ககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். குறிப்பாக கட்டுமானப் பகுதிகளுக்குச் செல்லும்போது, முக்ககவசம் அணிய வேண்டும். எய்ம்ஸ் மருத்துவனையில் கருப்பு பூஞ்சையால் பாதிகப்பட்டு 23 பேர் சிகிச்சையில் உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கிறார்கள். 2-ம் தர தொற்றான கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு அதிகமான கவனம் செலுத்த அனைத்து மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.

இந்த தொற்று புதிதானது அல்ல 2003ம் ஆண்டு சார்ஸ் தொற்று உருவானபோது கூட கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் ஏற்பட்டது. கொரோனா பாதிப்பின்போது, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்டீராய்டு மருந்தை அதிகம் எடுத்துக்கொண்டவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் கொரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 முதல் 10 நாட்கள் ஸ்டீராய்டு மருந்து கொடுத்தாலே போதுமானது. மூளை, மூக்கு, கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோயால், சில நேரங்களில் பார்வையை இழக்க நேரிடும், சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com